சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Thursday, 9 June 2016

பாவம், கர்ம வினை

பாவம், கர்ம வினை - நீங்கிட

    மனிதன் பாவத்தை விட்டு விட்டு புண்ணியம் சேர்த்து வருகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த பாவத்திலிருந்து அவனுக்கு விமோசனம் கொடுக்கப் பட்டு, புண்ணியம் சேர அவனும் இதே போல் கோள்களில் பிறப்பெடுக்க வாய்ப்புள்ளது.

    யாங்கள் கூறிய நடைமுறையையும், வழிமுறையையும் நீ பின்பற்றி வந்தால் இந்த பிறவியில் நல்ல நிலை கிடைக்குமா இல்லையா? அது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும். ஆயினும் நிச்சயமாக அக்கோள்களில் பிறப்பு எடுக்க வாய்ப்புண்டு.

     இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? எவ்வளவு புண்ணியங்கள் அவனிடம் இருக்கிறது. அவனால் பூமிக்கு என்ன நன்மை நடந்துள்ளது என்பதைதான் இறைவன் எதிர் பார்க்கின்றார். யார் எப்படி துன்பப்பட்டாலும், யார் எப்படி கஷ்டப்பட்டாலும் நான் மட்டும் இன்பமாக வாழ வேண்டும். யார் எக்கேடு கெட்டு நாசமாய் போனாலும் தான் மட்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களுக்கு நிச்சயமாக மீண்டும் இதே பூமிதான் கொடுக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இதையெல்லாம் ரகசியமாக வைத்துக்கொள்ளலாமா என்றால்? இதில் ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லையப்பா. ஏனென்றால் இது மனிதர்களுக்கு தெரியாத விஷயம் என்றாலும், நீ கூறினாலும் யாரு நம்பப் போவதில்லை. காரணம் அவர்கள் மன பக்குவம் அவ்வாறு இருக்கிறது. மனிதனின் மன பக்குவம் அவ்வாறு இருக்க காரணம் அவன் செய்த கர்ம வினைகளும், அவன் செய்த பாவ மூட்டைகளும்தான் என்பதை மறந்து விடாதே. பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் ஸ்தல யாத்திரை மேற்கொள்வது அவசியம். அதிகம், அதிகம், அதிகமாக தான தர்மம் செய்வது அவசியம்.

    ஒரே பிறவியில் ஒருவன் 1008 சிவனாலயங்கள் சென்று விடுவதாக வைத்துக் கொள். நிச்சயமாக அவனுக்கு கைலாயத்திலிருந்து எதாவது ஒரு பதவி நேர் முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்படும் என்பதை மறவாதே. எனவே நேரம் கிடைக்கும் சமயத்தில் ஸ்தல யாத்திரை என்ற பெயரில் பழங்கால சிவாலயங்களுக்கு நடந்து அல்லது பொது மக்கள் செல்லும் வாகனத்தில்  செல்ல வேண்டும் என்பதை நீ மறந்துவிடாதே. மேலும் தனிப்பட்ட சொகுசு வாகனத்தில் நீ செல்லக்கூடாது என்பது நியதி.

    ஏனென்றால் நீ செல்லும் போது பல இன்பங்களும் பல துன்பங்களும் சந்திப்பாய் அல்லது அந்த வாகனம் கூட விபத்து ஏற்படும். இவையல்லாம் கர்மவினையால் வரக்கூடிய செயல்கள்தான். இல்லை என்றால் உன் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் உன்னை ஏளனமாக பேசுவான், ஏதாவது ஒரு வகையில் உன்னை துன்புறுந்துவான். இதுவும் இறைவன் செய்யும் திருவிளையாடலே.

       எனவே இவையெல்லாம் பொறுத்துக் கொண்டு 1008 ஸ்தல யாத்திரை சிவனாலயங்கள் முடித்து விட்டால் கைலாயத்திலிருந்து அவன் ஆசிர்வதிக்கப்படுவான் என்பதை மறந்து விடாதே. இதையெல்லாம் மனிதர்களுக்கு கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா? மனிதர்கள் இறைவன் தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

     ஆனால் இன்றைக்கு எந்த மனிதனும் இறைவனை மதிப்பதில்லை. இறைவனின் மார்க்கத்தை பின்பற்றுவதும் இல்லை. பின்பற்றுவதெல்லாம் தனம். தனம் என்கின்ற பணம். பணம் என்கின்ற காசு. காசு என்கின்ற சொத்து. சொத்து என்கின்ற சுகம். சுகம் என்கின்ற இன்பம். இன்பம் என்கின்ற  ராஜபோக வாழ்க்கை. ராஜபோக வாழ்க்கை என்கின்ற பதவி. பதவி என்கின்ற புகழ். நான் என்கின்ற அகம்பாவம்.

       நான் என்கின்ற அகந்தை. நான் என்கின்ற ஆணவம். இதையெல்லாம் வைத்துக் கொண்டு வாழ்வதால் தான் மனதிற்கு, ஆழ்மனதிற்கு, எண்ணத்திற்கு, கண்களுக்கு, ஐம்புலன்களுக்கு இறைவனின் அருமை தெரியாமல் போகிறது.
     
       இறைவனின் அருமையை மனிதர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் இறைவனின் சொல் கேட்டு, பேச்சைக் கேட்டு நடப்பார்கள். இறைவனின் வழியில் செல்வோம் என்று நினைப்பார்கள். இதனால் அவர்களின் கர்மவினை குறைய ஆரம்பிக்கும்.

பூமி - இறைவனின் சிறைச்சாலை

 
இறைவனின் கருணையால்,
 
    பூமி என்பது அண்டத்தில், பிரபஞ்சத்தில் இது ஒன்றுதான். இந்த பூமியை தவிர பூமி என்கின்ற நாமத்தில் வேறு எந்த கோள்களும் இந்த அண்டத்தில் இல்லை. ஆனால் மனிதர்களைப் போல் வாழக் கூடிய இனங்கள் வேறு எங்காவது உள்ளதா? என்றால் நிச்சயமாக உள்ளது என்பதுதான் எங்களின் பதிலாகும். 

    மனிதர்களின் இன்றைய அறிவியல், நவீன விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்வதுமில்லை, நம்புவதுமில்லை. இன்றைய அறிவியல், நவீன விஞ்ஞானம் இந்த பூமியை மட்டுமில்லை, இந்த அண்டத்தையும்  சேர்த்துதான் அழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

      இறைவன் படைத்த படைப்பை மதிக்காமல், மனிதர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இயற்கையை சீண்டிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கையை சீண்ட, சீண்ட, இயற்கையை அழிக்க, அழிக்க அதன் விளைவாக இயற்கை அக்னித் தன்மை உருவாகிறது. அவ்வாறு உருவான அக்னிக்கு பெயர் காயத்ரி. காயத்ரியை பூமியில் அதிகரிக்க மனிதர்களே உதவி செய்து வருகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரக் கூடிய செய்தி. காயத்ரி என்ற அக்னி இப்பூமியில் இறங்கிவிட்டால் நிச்சயமாக மனிதர்களால் வாழ இயலாமல் போய்விடும். இப்பூமி வாழ்வதற்கு தகுதி இல்லாமல் மாறிவிடும் என்பது எங்களது பதில்.

      பூமியை தவிர மனிதர்கள் வாழக் கூடிய வேறு கோள்கள் உள்ளதா? என்றால் இறைவனின் கருணையால் குறைந்த பட்சம் 14 கோள்கள் வேற்று அண்டத்தில் மனிதர்கள் வாழ முழுத் தகுதியுடன் இறைவனால்  படைக்கப்பட்டுள்ளது. அந்த கோளில் மனிதர்கள் இங்கே வாழ்வது போல் அங்கேயும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். 

     ஆனால் அங்கே மனிதர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நாமத்தை அனுதினமும் ஜெபம் செய்தும், சத்தியத்தையும், தர்மத்தையும் காத்து, இறைவன் மட்டும்தான் உண்மை, மற்றவர்கள் யாரும் உண்மையில்லை, மாயை என்று வாழ்ந்து வருகின்றார்கள். 

     நான் யாரையும், எதற்காகவும், ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் நயவஞ்சகமாக பொருள் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பூமியை போல் நவகோள்கள் ஆட்கொண்டு வேலை செய்து வருகின்றதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது எங்கள் பதில்.
 
     காரணம் அக்கோள்களில் மனிதர்கள் இறைவனைப் பற்றி சிந்தனை செய்து  வாழ்ந்து வருவதால் அக்கோள்களுக்கு நவ கிரகங்கள் அவசியமில்லை. ஏனென்றால் இந்த பூமி இறைவனின் சிறைச் சாலை.  பாவம் செய்தவர்கள் மட்டும்தான் இந்த பூமியில் தள்ளப் படுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.