ஏன் தானம் தர்மம் செய்ய வேண்டும்?
பூமியில் ஒருவன் தனவானாக, செல்வந்தனாக, அதிகாரமிக்கவனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவன் பல கோடிகளுக்கு அதிபதி என்று வைத்துக் கொள். அவன்
மரணமடையும் சமயத்தில் அந்த கோடிகள் உதவியதா? அவனின் அதிகாரம் உதவியா? என்றால் நிச்சயமாக
இல்லை. மற்றொருவன் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து படிப்புகளையும் படித்துவிட்டான்.
அவன் மரணப் படுக்கையில் இருக்கும்போது அந்த படிப்புகள் அவனுக்கு உதவியதா?
என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் இதற்கான பதில்.
எனவே இதிலிருந்து
என்ன தெரிகின்றது என்று உற்று கவனித்தால், இந்த உலகத்திலுள்ள எதுவும் மரணத்தை அல்லது தடுத்து நிறுத்த முடியாது. நாம் எப்பொழுது இறைவனிடம்
போய் சேர வேண்டுமென்று நினைக்கின்றோமோ, அப்பொழுதுதான் போய் சேர வேண்டும். அதை விட்டுவிட்டு
சாவு, மரணம் அல்லது இறப்பு என்று மனிதர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால்
பஞ்சபூதத்தின் கையில் ஏன் மரணத்தை, இறப்பை, சாவைவிட வேண்டும். பஞ்சபூதம்தான்
நம்மையெல்லாம் அணுவணுவாக அழித்து கொண்டு வருகின்றது.
அந்த பஞ்சபூதத்தை வெல்லக் கூடிய
அணுக்களை நாம் எவ்வாறு பெறமுடியும்? அல்லது எப்போது பெற இயலும்?
இதை பற்றி விளக்கத்தை இன்னொரு பதிவில் பார்ப்போம். நான் யார்? நான் எதற்காக இந்த பூமியில் வாழ்கின்றேன்?
நான் இந்த பூமிக்கு என்ன நன்மை செய்தேன் அல்லது என்னை சார்ந்தவர்களுக்கு
என்ன செய்தேன்? அல்லது நான் வாழ்ந்த தெருவிற்கு என்ன செய்தேன்?
அல்லது நான் வாழ்ந்த ஊரிலுள்ள சிவன் ஆலயத்திற்கு என்ன செய்தேன்?
அல்லது நான் வாழ்ந்த ஊரிலுள்ள ஏதாவது ஒரு பழங்கால ஆலயத்திற்கு என்ன நன்மை
செய்தேன்? எதுவுமில்லை.
எந்த நன்மையும்
செய்யாவிட்டாலும், ஏதாவது ஒரு மரம் உதாரணமாக அரசமரம்,
அத்தி மரம், மாமரம், ஆலமரம்,
புங்கைமரம், வேப்பமரம் போன்ற மரங்களை வைத்தது முதல், இன்று வரை எந்த பூச்சிகள் பற்றாமல், பழுதடையாமல்
பாதுகாத்து வருகின்றேன் என்றாலும் பரவாயில்லை. அந்த மரமாவது உன்
பெயரை யாவது நிலைநாட்டுமப்பா. ஆனால் எந்த செயலும் செய்யாமல் இறைவன்
எனக்கு அதை செய்ய வேண்டும், இதை தர வேண்டும் அல்லது என்
குடும்பத்திற்கு இந்த செயல் நிறைவேற வேண்டும் என்று செய்யும் பிராத்தனைகள் எல்லாம் வீண்தானப்பா.
காரணம் இறைவன் எப்பொழுது ஒருவனுக்கு எல்லாவற்றையும் கொடுப்பார் என்றால் அவன் தன்னிடமுள்ளதை மழை போல், ஊற்று போல் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் கொடுப்பார். தானம் தானம் என்று சொல்கின்றோமோ,
அந்த தானத்தின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவ்வாறு
கொடுக்கும்போது அது ஊற்றுபோல் மாறும். ஊற்று என்னவாகும்?
குளம்போல் மாறும். குளம் அருவியாக மாறும்,
அருவி ஆறுபோல் மாறும். ஆறு கடல்போல் மாறும்.
இவ்வாறுதானப்பா ஒவ்வொரு செல்வந்தனும், பல பிறவிகளில் செய்த தானத்தினால் விளைந்த, புண்ணியங்களால், அச்செல்வங்கள் இன்று
ஆறு போலாகவும் கடல் போலாகவும் அவர்களிடம் செல்வம் இருக்கின்றது. அவ்வாறு தான தர்மங்கள் செய்ய செய்யத்தான்
இறைவனும் அவனுக்கு என்ன வேண்டும் என்று கவனிப்பார்.